;
Athirady Tamil News

சினிமாவை மிஞ்சும் பரபரப்பு- தங்கம், வெளிநாட்டு பணத்துடன் வாலிபரை கடத்திய 8 பேர் கும்பல்!!

0

திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை தடுக்க வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தினமும் லட்சக்கணக்கில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூர், மலேசியா, துபாய், தோஹா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 8 விமானங்கள் அடுத்தடுத்து வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளிடம் இருந்து சட்டவிரோதமாக மறைத்து கடத்தி வரும் தங்கங்களை வாங்குவதற்காக நேற்று இரவில் இருந்து வியாபாரிகள் விமான நிலையத்தில் ஆங்காங்கே காத்திருந்தனர். பின்னர் திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த இடைத்தரகர் சாதிக் பாட்சா என்பவர் ஒரு கிலோ தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை வாங்கிக் கொண்டு தன்னுடைய உறவினர்கள் 4 பேருடன் காரில் புறப்பட்டுள்ளார்.

அப்போது மர்ம கும்பல் அவர்களை பின்தொடர்ந்தது. அதில் ஒரு காரில் 4 பேரும், 2 இருசக்கர வாகனங்களில் 4 பேரும் என மொத்தம் 8 பேர் வந்துள்ளனர். சாதிக் பாஷா தரப்பினர் தென்னூர் மூல குலத்தெரு பகுதியில் காரில் இருந்து இறங்கும்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவர்களை மடக்கி கத்தியை காட்டி மிரட்டியது. இதனால் செய்வதறியாது தவித்த சாதிக் பாட்சாவை அந்த கும்பல் தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளுடன் கடத்தியது. இதைப்பார்த்த சாதிக் பாட்சாவின் உறவினர்கள் கூச்சலிட்டனர். இதற்கிடையே ரம்ஜான் நோன்பு திறப்பதற்காக தொழுகை முடித்துவிட்டு பள்ளி வாசல் அருகே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் இந்த சத்தம் கேட்டு ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த கடத்தல் கும்பல் அங்கிருந்து சாதிக்பாட்சாவுடன் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

அதில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவர் மட்டும் காரில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்தார். அவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நடந்த சம்பவங்களை திருச்சி அரசு மருத்துவமனையிலும் கூறினர். அதன் பின்னர் தான் கடத்தல் சம்பவம் நடந்தது காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து தில்லைநகர் போலீசார் விரைந்து சென்று கடத்தல் சம்பவம் நடந்த தென்னூர் பகுதியில் விசாரணை மேற் கொண்டனர்.

அதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி அரசு மருத்துவமனை காவல்நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று வந்த கதிரேசனிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில், கதிரேசனை ஒப்படைத்தால், நாங்கள் சாதிக்பாட்சாவை விடுவிப்போம் என்று கடத்தல் கும்பல தெரிவித்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட போலீஸ் குழுவினர் கதிரேசனை கைது செய்து அவரை அழைத்துக் கொண்டு சமயபுரம் பகுதியில் காத்திருந்த கடத்தல் கும்பலிடம் சென்றுள்ளனர். ஆனால் அச்சம் அடைந்த மர்ம நபர்கள் போலீஸ் படையினர் வருவதற்குள் சாதிக்பாட்சாவை அதே பகுதியில் இறக்கிவிட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து சமயபுரம் பகுதியில் அவரை மீட்ட போலீசார் அவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் இதில் சாதிக் பாட்சா எவ்வளவு நகைகள் கொண்டுவந்தார் என்பது இதுவரை தெளிவாக சொல்லப்படவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பிடிபட்டுள்ள கதிரேசனும் கடத்தல் தங்கத்தை வாங்கும் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார். தங்கத்தை வாங்குவதற்கு நடந்த போட்டியில் சாதிக் பாஷா மொத்த நகைகளையும் வாங்கிக் கொண்டு புறப்பட்டதால் ஆத்திரமடைந்த கதிரேசன் தரப்பினர் அவரை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.