மரத்தில் இருந்து இறந்து விழுந்த வவ்வால்கள்- வனத்துறை, சுகாதாரத்துறையினர் ஆய்வு!!
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மரங்களில் வவ்வால்கள் தலைகீழாகதொங்கி வருகிறது. பகல் நேரங்களில் தலைகீழாக தொங்கும் வவ்வால்கள் இரவு நேரங்களில் பறந்து திரியும்.நாகர்கோவில் ராணி தோட்டம் டெப்போ பகுதியில் 3 பழமை வாய்ந்த மரம் உள்ளது. இந்த மரங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவ்வால்கள் தொங்குவது வழக்கம். இதனால் இங்கு இரவு நேரங்களில் வவ்வால்கள் சத்தம் அதிகமாக இருக்கும்.
நேற்றும் வழக்கம் போல் ஏராளமான வவ்வால்கள் தொங்கிக்கொண்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை மரத்திலிருந்து வவ்வால்கள் இறந்து கீழே விழுந்தன. ஒன்றன்பின் ஒன்றாக வவ்வால்கள் இறந்து விழுந்து கொண்டே இருந்தது.சுமார் 50-க்கும் மேற்பட்ட வவ்வால்கள் இறந்து கீழே விழுந்தன. கீழே விழுந்த வவ்வால்களை அந்த பகுதியில் சுற்றி திரிந்த நாய்கள் தூக்கி சென்றது. இதை பார்த்த போக்குவரத்துதுறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் போலீசுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மேலும் சில வவ்வால்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. மரத்திலிருந்து வவ்வால்கள் திடீரென இறந்து விழுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். வெப்ப தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால் வவ்வால்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இறந்து விழுந்த வவ்வால்களை வனத்துறை அதிகாரிகளும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.