பப்புவா நியூகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!
பப்புவா நியூகினியாவில் இன்று அதிகாலை 4 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாக பதிவானது. பப்புவா நியூகினியாவின் கடலோர நகரமான வெவாக்கில் இருந்து சுமார் 97 கி.மீ. தொலைவில் 62 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பயத்தில் அலறி அடித்து வெளிேய ஓடி வந்தனர். இந்தோனேசியாவின் எல்லை பகுதியில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுமோ என அஞ்சப்பட்டது.
ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதேபோல அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்திலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அலாங்காவில் உள்ள ஆண்ட்ரியானோப் தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கங்களால் சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.