மாணவர்களைப் பரீட்சைக்கு அனுமதிக்காத விடயத்தில் பல்கலைக்கழக அலுவலர்கள் மூவரை ஆஜராகப் பணிப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் தேவையான வரவு விகிதத்தைப் பூர்த்தி செய்யாத காரணத்துக்காகப் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்காத மாணவர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பல்கலைக்கழக அலுவலர்கள் மூவரை ஆஜராகுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.
பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்படாத மாணவர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் மீதான விசாரணைகள் நாளை – 04 ஆம் திகதி செவ்வாய்க் நடைபெறவுள்ளது. இந்த முறைப்பாட்டில் எதிரளகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள விஞ்ஞான பீடாதிபதி, பரீட்சைக் கிளையின் பிரதிப் பதிவாளர் மற்றும் துணைவேந்தர் ஆகியோரையே நாளை நண்பகல் 12 மணிக்கு ஆஜராகுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் அறிவித்துள்ளார்.
எனினும், மாணவர்களின் மேன்முறையீட்டுக்கமைய இன்று மாலை கூடிய விசேட விஞ்ஞான பீடச் சபை, வரவின்மை காரணமாகப் பரீட்சை எழுத அனுமதிக்கப்படாத மாணவர்களைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கு அனுமதிப்பதெனவும், அவர்கள் தவற விட்ட அலகுகளுக்கென விசேட பரீட்சைகளை நடாத்துவதற்கும் தீர்மானித்துள்ளது.
விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான நியமங்களின் படி விரிவுரைகளுக்கு 80 சதவீத வரவு இல்லாத மாணவர்களைப் பரீட்சைக்கு அனுமதிப்பதில்லை. விசேட மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக வரவின்மையை உறுதிப்படுத்தி பீடச் சபையிடம் மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பீடச்சபையின் பரிந்துரையுடன், மூதவையால் விசேட அனுமதி வழங்கப்படுவது வழமையாகும்.
இருப்பினும், தற்போதைய பொருளாதார இடர்களின் மத்தியில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டண உயர்வு காரணமாக வரவுத் தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்யாத ஒரு சில மாணவர்கள் பீடாதிபதியிடம் கோரிக்கை விடுத்தபோதிலும் அதனைக் கருத்திற் கொள்ளாமல், பாரபட்சமான முறையில் வேறு மாணவர்களைப் பரீட்சை எழுத அனுமதித்துள்ளதுடன், தங்களை அனுமதிக்காமை அடிப்படை மனித உரிமை மீறலாகுமெனக் கூறி யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து இது தொடர்பில் உடனடியாக விளக்கமளிக்குமாறு விஞ்ஞான பீடாதிபதியை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த விஞ்ஞான பீடாதிபதி வரவின்மை தொடர்பில் பீடச் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் மூதவை மட்டுமே தீர்மானிக்கமுடியும் என்றும், உடனடியாக பீடச்சபையைக் கூட்டி முடிவெடுக்கப்படும் என்று பதிலளித்திருந்தார். அதன் அடிப்படையில் விசேட பீடச் சபைக் கூட்டம் ஒன்றும் இன்று மாலை இடம்பெற்றது.
இந்நிலையில், முறைப்பாட்டின் எதிராளிகளை விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், வரவின்மை காரணமாகப் பரீட்சை எழுத அனுமதிக்கப்படாத மாணவர்களைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கு அனுமதிப்பதெனவும், அவர்கள் தவற விட்ட அலகுகளுக்கென விசேட பரீட்சைகளை நடாத்துவதற்கும் இன்று மாலை நடைபெற்ற விசேட விஞ்ஞான பீடச் சபைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ். பல்கலையில் போதிய வரவின்மையால் பரீட்சைக்கு அனுமதியில்லை : ஆராய கூடுகிறது விஞ்ஞான பீடச் சபை!!