மலேசியாவில் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய பாராளுமன்றம் ஒப்புதல்!!
மலேசியாவில் கொலை, பயங்கரவாத செயல் உள்ளிட்ட பல்வேறு குற்றசெயல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த மரண தண்டனை சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, கட்டாய மரண தண்டனையை ஒழிப்பதற்கு வகை செய்யும் சட்டமசோதா உருவாக்கப்பட்டது. விவாதத்திற்கு பிறகு இந்த புதிய மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் தூக்கு மேடையை எதிர்நோக்கி உள்ள 1300 கைதிகளின் தண்டனை குறைய வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்பு கொலை, போதைப்பொருள் கடத்தல், தேசத்துரோகம், கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
தற்போது மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தின்படி, கடத்தல், பயங்கரவாதம் மற்றும் சில ஆயுத வழக்குகளில், மரணத்தை ஏற்படுத்தாத சில குற்றங்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்யலாம். இந்த சட்டம் தொடர்பாக சட்டத்துறை இணை மந்திரி ராம்கர்பால் சிங் கூறுகையில், ‘இந்த சீர்திருத்தங்கள் மலேசியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மரண தண்டனை நடைமுறையில் இருக்கும். அதேசமயம், சில குற்றங்களுக்கு தண்டனையை மறுஆய்வு செய்து 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வாய்ப்பு நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், குற்றவாளிகள் தங்கள் தண்டனையை மறுஆய்வு செய்யும்படி 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்’ என்றார்.
மலேசியாவில் 2018 ஆம் ஆண்டு முதல் தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய கடந்த ஆண்டு சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. ஆனால் பொதுத் தேர்தலுக்காக பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.