வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்: அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் கூட்டு போர் பயிற்சி!!
வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலுக்கு எதிராக தென்கொரியா, அமெரிக்கா ஜப்பான் கடற்படைகள் இணைந்து நீர்மூழ்கி கப்பல் பயிற்சியை நேற்று தொடங்கின.
வடகொரியாவின் மிரட்டலானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறைந்த இடைவெளியில் அதிக எண்ணிக்கையிலான ஏவுகணை சோதனைகளை நடத்தி அண்டை நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வருகின்றது. கடந்த வாரம் அணுகுண்டு தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும்படி அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் ஒருங்கிணைந்து கூட்டு போர் பயிற்சியை தொடங்கியுள்ளன.
மூன்று நாடுகளின் கடற்படையும் கடந்த 6 மாதங்களில் முதல் முறையாக நீர்மூழ்கி கப்பல் பயிற்சியை நேற்று தொடங்கினதென்கொரியாவின் தெற்கு தீவான ஜெஜூ தீவில் இந்த இரண்டு நாள் பயிற்சி நடைபெறுகின்றது. அணுசக்தியால் இயங்கும் யூஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கி கப்பல் மற்றும் தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெடிகுண்டு, பீரங்கிகளை ஏற்றி செல்லும் போர்க் கப்பல்கள் இதில் ஈடுபட்டன. வடகொரியாவின் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் கடலுக்கு அடியிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மூன்று நாடுகளின் கடற்படை திறனை மேம்படுத்தும் வகையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.