சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகத்தில் 3 நாட்கள் முகாமிட பிரதமர் மோடி திட்டம்!!
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் தான் பா.ஜனதா பலம் வாய்ந்து இருக்கிறது. இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதையொட்டி தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே கர்நாடகத்திற்கு 7 முறை பிரதமர் மோடி வந்தார். இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், 80 முதல் 90 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதனால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தன்னுடைய தேர்தல் வியூகங்களை மாற்றி அமைத்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதற்காக பிரதமர் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்த பா.ஜனதா முடிவு செய்திருக்கிறது. முதற்கட்டமாக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வருகிற 9-ந் தேதி பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தர உள்ளார். அதன்பிறகு, பிரதமர் மோடி பங்கேற்கும் 20 பேரணி களை மாநிலத்தில் 6 மண்டலங்களில் நடத்துவதற்கு பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் சொந்த ஊரான கலபுரகி, அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்துவதற்கு பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
அத்துடன் மே 6-ந் தேதியில் இருந்து பிரசாரம் முடியும் கடைசி நாளான 8-ந் தேதி வரை, தொடர்ந்து 3 நாட்கள் கர்நாடகத்திலேயே பிரதமர் மோடி முகாமிட்டு இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் தீவிர பிரசாரம் காரணமாக கூடுதலாக 15 முதல் 25 தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.