;
Athirady Tamil News

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 126-வது இடம்!!

0

ஐக்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு தீர்வுகள் வலையமைப்பில், 2023-ம் ஆண்டு உலக மகிழ்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. தமது மகிழ்ச்சி குறித்த மக்களின் சொந்த மதிப்பீடு, சமூக, பொருளாதார தகவல்கள் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டிருந்தது. மேலும், சமூக ஆதரவு, வருவாய், ஆரோக்கியம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழலின்மை ஆகிய 6 முக்கிய காரணிகளும் கணக்கில்கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறு மூன்றாண்டு காலத்தில் திரட்டப்பட்ட தகவல்களில் சராசரி அடிப்படையில் மகிழ்ச்சி மதிப்பெண் அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், உலக மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தைப் பிடித்திருந்தது. ஆனால் 146 நாடுகள் அடங்கிய இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 126-வது இடமே கிடைத்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு நம் நாடு பெற்ற 136-வது இடத்துடன் ஒப்பிடும்போது இது 10 இடங்கள் முன்னேற்றம் என்றபோதும், பிரச்சினைகளில் தவிக்கும் அண்டை நாடுகளான பாகிஸ்தான் (108-வது இடம்), இலங்கையைவிட (112) பின்தங்கியே உள்ளது. இந்நிலையில், உலகின் மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு தவறாக 126-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. 48-வது இடம்தான் இந்தியாவுக்கு சரியானதாக இருக்கும் என பாரத ஸ்டேட் வங்கியின் குழும தலைமை பொருளாதார ஆலோசகர் சவும்யா காந்தி கோஷ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘மனநிலை சார்ந்த விஷயமான மகிழ்ச்சியை வரையறுப்பது கடினம். இந்நிலையில், உலகம் முழுவதும் ஒரே கண்ணாடியைக் கொண்டு மகிழ்ச்சியை அளவிடுவதும், எல்லா நாட்டு ஆண்கள், பெண்களும் ஒரு மாதிரியாகவும், ஒரு விஷயத்தில் ஒரே அளவிலும்தான் மகிழ்ச்சி அடைவார்கள் என்று கணக்கிடுவதும் சரியாக இருக்காது. உலகின் ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் ஒவ்வொரு தனித்தன்மையை பரிணாமம் வழங்கியுள்ளது. மனிதனின் மகிழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமான, குடும்பத்தினர், நண்பர்கள் என்ற சமூக உறவுகளில், உலகின் பெரும்பாலான நாடுகளைவிட இந்தியா முன்னணியில் இருப்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.