திருப்பதி கோவிலில் இன்று தங்க தேரோட்டம் நடக்கிறது!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் 3 நாள் வருடாந்திர வசந்த உற்சவம் தொடங்கியது. மலையப்பசாமிக்கு வசந்த காலத்தில் நடக்கும் விழாவுக்கு ‘வசந்தோற்சவம்’ எனப் பெயர். சூரியனின் உஷ்ணத்தில் இருந்து இறைவனை தணிக்கும் விழா என்பதால், இது உபசமானோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விழாவில் மணம் வீசும் மலர்களுடன் பலவகை இனிப்பான பழங்களும் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த விழாக்களுக்காக ஒரு கவர்ச்சியான மண்டபமும் வடிவமைக்கப்படும். அது வசந்த மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. வசந்த மண்டபத்தில் 250 கிலோ வெட்டிவேர், 500 கிலோ பாரம்பரிய பூக்கள், 10 ஆயிரம் கொய்மலர்கள் போன்றவற்றால் பக்தர்களை கவரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
மேலும் பல்வேறு வகையான மரம் மற்றும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, குரங்கு, நரி, மலைப்பாம்பு, நல்ல பாம்பு, மயில், அன்னப்பறவை, வாத்து, மைனா, கிளி போன்ற உருவப்பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன. அந்த மண்டபம் சேஷாசலம் வனத்தை ஒத்ததாக இருந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி நேற்று காலை ஏழுமலையான் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து வசந்த மண்டபத்தை அடைந்தனர். மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. முன்னதாக விஸ்வக்சேனாராதனா, புண்யாஹவச்சனம், நவ கலசாபிஷேகம், ராஜோபசாரம் நடந்தது.
அதைத்தொடர்ந்து சத்ர சாமர வியாஜன், தர்பணாதி நைவேத்தியம், முக சுத்தி, தூப பிரசாதம் வழங்கப்பட்டது. சங்கதாராவுடன், சக்ரதாரா, சஹஸ்ரதாரா, மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. வசந்தோற்சவத்தில் பங்கேற்ற வேத பண்டிதர்கள் ஸ்நாபன திருமஞ்சனத்தின்போது தைத்தரிய உபநிடதம், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள் மற்றும் திவ்யப் பிரபந்தத்தின் பாசுரங்களை ஓதினர். ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் சாமிக்கும், தாயார்களுக்கும் பல்வேறு வகையான உத்தமஜாதி மலர் மாலைகள் அணிவித்து அலங்கரித்தனர்.
இறுதியில் சாமியும், தாயார்களும் வசந்த மண்டபத்தில் இருந்து மாலை புறப்பட்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். நிகழ்ச்சியில் ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர். வசந்தோற்சவத்தின் ஒரு பகுதியாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.