ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை அளியுங்கள் – பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்!!
கொரோனா பரவலை தொடர்ந்து ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 50 சதவீத கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. சலுகையை மீண்டும் அளிக்குமாறு பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்தபோதிலும், ரெயில்வே இன்னும் சம்மதிக்கவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: மத்திய அரசு ரூ.45 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுகிறது. மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளித்தால் ரூ.1,600 கோடி மட்டுமே செலவாகும். இது, ஒரு பெரிய கடலில் சிறிய துளி போன்றது. இத்தொகையை செலவழிப்பதால், அரசு ஒன்றும் ஏழை ஆகிவிடாது. கட்டண சலுகையை நிறுத்தியதால், மூத்த குடிமக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்ற பிம்பம்தான் உருவாகும். மூத்த குடிமக்களின் ஆசி இல்லாமல், எந்த நாடும், தனிமனிதரும் முன்னேற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.