ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் எந்த தியாகத்துக்கும் தயார்- கண்டன போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி ஆவேசம்!!
ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நடைபெறும் தொடர் போராட்டத்தில் எஸ்.சி. துறை சார்பில் கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணையம் அருகே கண்டன கூட்டம் நடந்தது. எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன் குமார் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. மாநில தலைவர் டி.ஏ.நவீன், சிறுபான்மையர் பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா, பழங்குடியினர் பிரிவு தலைவர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:- எந்த தவறும் செய்யாத ராகுல் காந்திக்கு இதுவரை எந்த நீதிமன்றமும் வழங்காத தண்டனையை சூரத் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. ராகுல் மீதான வழக்கு, தண்டனைக்கான உண்மையான காரணம் அவரை பாராளுமன்றத்தில் பேசவிடாமல் தடுப்பதுதான். அதானி விவகாரத்தை பொதுவெளியில் பேசினால் மோடியோ மற்றவர்களோ பதில் அளிக்க அவசியமில்லை. பாராளுமன்றத்துக்குள் பேசினால் பதில் அளித்தே தீர வேண்டும். அதை தவிர்க்கவே இந்த மோசமான நடவடிக்கையை எடுத்துள்ளார்கள். பொது நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் தவறில்லை.
ஆனால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும், எல்.ஐ.சி.யும் பெருமளவு பங்குகளை அதானி நிறுவனத்திடம் வாங்கியது ஏன்? அந்த கம்பெனி 15 லட்சம் கோடி நஷ்டத்தை சந்தித்த பிறகு அந்த கம்பெனியில் வருங்கால வைப்புநிதியை முதலீடு செய்ய யார் காரணம்? பெயர் சொல்ல விரும்பாத ரூ.20 ஆயிரம் கோடி எங்கிருந்து வந்தது? ராணுவம் சார்ந்த நிறுவனங்களில் மோடியும், சீனா காரர்களும் முதலீடு செய்து இருக்கிறார்கள். இதனால் தேச பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தாதா? மோடியை எதிர்த்து பேசினால் தேச துரோகியா? ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படும் போது அதை காக்க எந்த தியாத்தையும் செய்ய காங்கிரஸ் தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.