புதிய வெளியுறவு கொள்கையால் இந்தியா, சீனாவுக்கு முன்னுரிமை: ரஷ்ய அதிபரின் அறிவிப்புக்கு வரவேற்பு!!
ரஷ்யாவின் புதிய வெளியுறவுக் கொள்கையின்படி இந்தியா, சீனாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிபர் புடின் கூறியுள்ளார். அதனை சீனா வரவேற்றுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு மத்தியில் புதிய வெளியுறவுக் கொள்கையை ரஷ்யா வகுத்துள்ளது. இதற்கான கொள்கை முடிவு அடங்கிய சட்டத்திற்கு ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுள் உலகின் மிகப்பெரிய சக்திகளாக உருவாகி வருகின்றன. சீனா, இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
இவரது அறிவிப்பின் மூலம் ரஷ்யா – சீனா – இந்தியா நாடுகளின் கூட்டாண்மை வலுப்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், ‘சர்வதேச மற்றும் பிராந்திய எல்லைகள் தொடர்பான பிரச்னைகள் இருந்த போதிலும், ரஷ்யா மற்றும் இந்தியா உடனான உறவை வலுப்படுத்தவும், பன்முகத்தன்மையை பாதுகாக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். சீனாவும், ரஷ்யாவும் பரஸ்பர நட்பு நாடுகளாகும். கடந்த மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவிற்கு அரசு முறை பயணமாக சென்றுவந்தார். இரு தலைவர்களும் எதிர்கால திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்’ என்றார்.