குப்பைத் தொட்டியில் வீசிய உணவின் மூலம் டிஎன்ஏ டெஸ்டில் சிக்கிய இந்திய வம்சாவளி இளைஞர்!!
அமெரிக்காவில் நடந்த தீ வைப்பு வழக்கில் குப்பை தொட்டியில் வீசிய உணவின் மூலம் நடத்தப்பட்ட டிஎன்ஏ டெஸ்டில் இந்திய வம்சாவளி இளைஞரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மேடிசன் அலுவலக கட்டிடத்தில், கடந்தாண்டு மே மாதம் தீவைப்பு மற்றும் வெடிபொருள் வீசப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹ்ரிதிந்து சங்கர் ராய்சவுத்ரி (29) என்பவரை, பாஸ்டன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஹ்ரிதிந்து சங்கர் ராய்சவுத்ரிக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இதுகுறித்து புலனாய்வு பிரிவு போலீசார் கூறுகையில், ‘இவ்வழக்கில் ஹ்ரிதிந்து சங்கர் ராய்சவுத்ரியை சந்தேகத்திற்குரிய நபராக அடையாளம் கண்டோம். அவர் குப்பைத் தொட்டியில் வீசிய உணவில் இருந்து அவரது டிஎன்ஏவை பரிசோதித்தோம். அதன் மாதிரிகள் உறுதி செய்யப்பட்டதால், தற்போது அவரை கைது செய்துள்ளோம். அவரை மேடிசனில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளோம்’ என்றனர்.