பிரதமர் மோடியின் கல்வி தகுதி சர்ச்சை தேவையற்றது: தேசியவாத காங்கிரஸ் கருத்து!!
பிரதமர் மோடியின் எம்.ஏ. (அரசியல் அறிவியல்) பட்டச்சான்றிதழ் போலியானது என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் மோடியின் பட்டச்சான்றிதழ் கேட்டு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குஜராத் கோர்ட்டு உத்தரவிட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி, “பிரதமர் மோடி தனது கல்வி தகுதியை மறைக்க வேண்டிய மர்மம் என்ன?. அதை அவர் வெளியிட வேண்டும். மோடி தனது பட்டச் சான்றிதழை அவர் கட்டிய புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்” என்று விமர்சித்தார்.
ஆனால் உத்தவ் தாக்கரே கட்சியுடன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடியின் கல்வி தகுதி பிரச்சினை தேவையற்றது என்று கருத்து கூறியுள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரியும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நிருபர்களிடம் கூறியதாவது:- பட்டப்படிப்பு விவகாரத்தில் என்ன இருக்கிறது?. நமது ஜனநாயகம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. 543 தொகுதிகளை கொண்ட மக்களவையில் பெரும்பான்மை யாருக்கு இருக்கிறதோ, அவர் பிரதமர் ஆவார்.
மருத்துவ துறையில், ஒருவர் டாக்டராக பணியாற்ற எம்.பி.பி.எஸ். அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அரசியலில் அப்படி எதுவும் இல்லை. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு அவரது கல்வி தகுதியை பார்த்து மக்கள் யாரும் ஓட்டுப்போடவில்லை. அவர் பா.ஜனதாவில் இல்லாத ஒரு வசீகரத்தை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உருவாக்கினார். அதுவே அவரது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதன் முழு புகழும் மோடியை தான் சாரும். அவர் (மோடி) 9 ஆண்டுகளாக நாட்டை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவருடைய அல்லது வேறு சில மந்திரிகளின் கல்வி தகுதி பற்றிய பிரச்சினை தோண்டி எடுக்கப்படுவதை நான் கவனிக்கிறேன்.
இது ஒரு முக்கியமான பிரச்சினை அல்ல. நாட்டில் பல முக்கிய பிரச்சினை நிலவுகிறது. குறிப்பாக பணவீக்கம் மற்றும் வேலையின்மை முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இவற்றை பற்றி யாரும் விவாதிக்க தயாராக இல்லை. பிரதமர் மோடியின் கல்வி தகுதி பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறு அஜித்பவார் கூறினார்.