;
Athirady Tamil News

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: முன்னாள் அதிபர் டிரம்ப் கைதாகி விடுதலை!!

0

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப், கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார். தனக்கும் டிரம்புக்கும் இடையே இருந்த ரகசிய உறவு பற்றி அவர் தெரிவித்தார். இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் நடிகை ஸ்டார்மியின் இந்த தகவலால் தேர்தலில் டிரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து இவ்விவகாரத்தை பற்றி ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு தனது வக்கீல் மைக்கேல் கோஹன் மூலம் ரூ.1.07 கோடி டிரம்ப் கொடுத்தார். அந்த பணம் தேர்தலில் பிரசார நிதியில் இருந்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது. அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் என்பதால் டிரம்ப் மீது சமீபத்தில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நியூயார்க் மன்ஹாட்டன் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணை தொடங்கியது.

கோர்ட்டில் ஆஜராக புளோரிடாவில் இருந்து விமானம் மூலம் நியூயார்க்குக்கு டிரம்ப் வந்தார். பின்னர் கோர்ட்டில் சரணடைந்த டிரம்ப் அமெரிக்க சட்டவிதிகளின் படி முதலில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் உயர் பதவியை வகித்ததை கருத்தில் கொண்டு கை விலங்கு பூட்டப்படவில்லை. அவரது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் விசாரணை தொடங்கியது. டிரம்ப் தனது வக்கீல்களுடன் நீதிபதி முன்பு அமர்ந்திருந்தார். நீதிபதியின் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளிலேயே டிரம்ப் பதில் அளித்தார். அவர் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்த போது அதை திட்டவட்டமாக மறுத்தார். தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று பதில் அளித்தார். சுமார் 57 நிமிடங்கள் கோர்ட்டில் இருந்த டிரம்ப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியேறிய அவர் புளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு சென்றார். அங்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘இந்த வழக்கு நாட்டுக்கு பெரும் அவமானம். அமெரிக்காவில் இதுபோன்று நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் நிரபராதி. நம் நாடு நரகத்துக்கு போகிறது. நான் செய்த ஒரே குற்றம் நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக அச்சமின்றி பாதுகாத்ததுதான். அமெரிக்க நீதி அமைப்பு தற்போது சட்டமற்றதாக இருக்கிறது.

வருகிற 2024-ம் ஆண்டு அதிபராக தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுக்கவே இந்த போலி வழக்கு போடப்பட்டது. அதை உடனடியாக கைவிட வேண்டும்’ என்றார். அமெரிக்க வரலாற்றில் கிரிமினல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆஜரானதையொட்டி நியூயார்க்கில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. டிரம்ப்பிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.