பம்பையில் இன்று ஐயப்பனுக்கு ஆராட்டு விழா: பக்தர்கள் திரண்டு தரிசனம்!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து வந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் 9-ம் நாளான நேற்று கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடத்தப்பட்டன. தொடர்ந்து உற்சவ பலி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஐயப்பனை வைத்து மேள தாளம் முழங்க ஊர்வலம் கொண்டு சென்றனர். இரவு 9.30 மணிக்கு சரம் குத்தி வந்ததும் பள்ளி வேட்டை நடந்தது.
அதன்பிறகு யானையில் ஊர்வலமாக புறப்பட்ட ஐயப்பன், இரவு 12 மணிக்கு சன்னிதானத்தை வந்தடைந்தார். பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக பம்பையில் இன்று (புதன்கிழமை) ஆராட்டு விழா நடந்தது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஐயப்பனை அமர வைத்து மேள தாளம் முழங்க சன்னிதானத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் பம்பை ஆற்றுக்கு பகல் 11.30 மணிக்கு வந்ததும் அங்கு தந்திரி கண்டரரு மகேஷ் மேகனரு தலைமையில் ஐயப்ப சாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. தொடர்ந்து பகல் 1 மணிக்கு பம்பை கணபதி கோவிலுக்கு சாமி கொண்டு வரப்பட்டது. அங்கு பக்தர்கள் திரண்டு ஐயப்ப சாமியை தரிசனம் செய்தனர். மாலையில் அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக ஐயப்ப சாமி சன்னிதானம் வந்தடைகிறார். தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் திருவிழா கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.