கடலூர் அரசு மருத்துவமனையில் 10 ஆண்டுக்கு பிறகு ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 ஆண் குழந்தைகள் !!
நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. 8 மாத கர்ப்பிணியான மகேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் பிரசவத்திற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் கவிதா தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரசவம் பார்த்தனர். அப்போது மகேஸ்வரிக்கு பரிசோதனை செய்ததில் கருவில் 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் அவருக்கு அழகான 3 ஆண் குழந்தைகள் பிறந்தது. இருப்பினும் குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால், இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டது.
தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கடந்த 40 நாட்களாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் மூன்று குழந்தைகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதுடன், எடையும் அதிகரித்தது. இதனால் ஆரோக்கியத்துடன் இருக்கும் 3 குழந்தைகளையும் வீட்டுக்கு அனுப்பி வைக்க மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை 3 குழந்தைகளையும் மருத்துவ குழுவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்ததால் குழந்தையின் பெற்றோருக்கு மருத்துவ குழுவினர் பரிசு வழங்கினர்.