மின் கட்டணம் குறைக்கப்படும் சாத்தியம் !!
மின்சார கட்டணம் 30% ஆல் குறைக்கப்பட வேண்டும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தவிசாளர் ஜானக ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.
மின்சார தேவை குறைந்துள்ளமையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததுடன் எரிபொருள் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப மின் கட்டணமும் குறைக்கப்பட வேண்டும் என நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சநதிப்பில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் முதல் மூன்று மாதங்களில் மின்சார தேவை 18% ஆல் குறைந்துள்ளது. மின்சாரத் தேவை குறைந்துள்ளதால், மின் உற்பத்தி மற்றும் விநியோக செலவும் குறையும். ஆகையால், இலங்கை மின்சார சபையினால் இவ்வருடத்திற்காக மதிப்பிடப்பட்ட மின் தேவை மதிப்பீடு தவறானது என்பது தெரிகிறது என்று அவர் தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தின் மதிப்பீடு சரியானது. ஏனென்றால் குறித்த தேவைக் குறைவால் நாங்கள் 35% கட்டண உயர்வை பரிந்துரை செய்திருந்தோம். ஆனால் இந்த நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் பெரும்பான்மையான ஆணைய உறுப்பினர்கள், இலங்கை மின்சார சபையால் பரிந்துரைக்கப்பட்ட 60% உயர்வை அங்கீகரித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையால் மதிப்பிடப்பட்ட மின் தேவைக்கு மாறாக குறைந்த தேவையே இருக்கிறது. எனவே மின் விநியோகத்திற்கான செலவு குறைக்கப்பட வேண்டும்”, என ரத்நாயக்க தெரிவித்தார்.
நாப்தா எண்ணெய், எரிபொருள், நிலக்கரி மற்றும் டீசல் எண்ணெய்களின் விலை குறைப்பின் நன்மை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணையத் தவிசாளர் தெரிவித்தார்.