சர்வதேசியவாதி க. பத்மநாபாவின் சிலை திறப்பு!! (PHOTOS)
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்)யின் ஸ்தாபகத் தலைவரும் அதன் முதலாவது செயலாளர் நாயகமுமான க.பத்மநாபாவின் திருவுருவச் சிலை 05.04.2023 புதன்கிழமை அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது.
வவுனியா மணிக்கூண்டு கோபுரத்திற்கு எதிரில் தந்தை செல்வாவின் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள க. பத்மநாபாவின் சிலையினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க. சுரேஷ் பிரேமச்சந்திரன்; திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார்.
இது குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந. சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு:
இலங்கையை ஆட்சி செய்த பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் இறுதிப் பகுதியிலிருந்தே இந்த நாட்டை தனிச்சிங்கள நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் கட்டம்கட்டமாக கட்டவிழ்த்து விடப்பட்டன. இலங்கையின் ஒருங்கிணைக்கப்பட்ட பாட்டாளிவர்க்கமான தோட்டத் தொழிலாளர்களிடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒடுக்குமுறையானது வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள்மீதும் மேற்கொள்ளப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ் தேசிய இனத்தின் விடுதலையை வலியுறுத்தி மலையகத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து போராடுவதன் மூலமே முழுமையான தேசிய இன விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதிலும் அதன் அடுத்த கட்டமாக இலங்கையை ஒரு சோசலிச நாடாகக் கட்டியெழுப்ப முடியும் என்பதிலும் தோழர் பத்மநாபா உறுதியாக இருந்தார். தேசிய இன விடுதலையையும் சமூக விடுதலையையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். அன்றைய உலக ஒழுங்கில் சோவியத் சார்பு நிலையை எடுத்து, சிறந்த ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும் கட்சியை வழிநடத்தினார்.
அவரது சீரிய தலைமையில் இன்றைய தலைவரும் அவருடன் தோளோடு தோள் நின்று அவருக்கு உறுதுணையாக செயற்பட்டார். அன்றைய இந்தியாவும் இதே நிலைப்பாட்டில் இருந்ததால், இந்தியாவுடனான அவரது நெருக்கம் வெறும் அண்டைநாடு என்பதையும் தாண்டி கொள்கைரீதியான உறவாகவும் இருந்தது.
இந்தியாவின் பாதுகாப்பும், ஈழத் தமிழர்களின் பாதுகாப்பும் பிரித்துப் பார்க்கமுடியாதவை என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிருந்தார். எமது செயலாளர் நாயகம் க.பத்மநாபாவின் நினைவு மலரில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்கள், ‘எனது அன்னையும் பத்மநாபாவும் தமக்கிடையே பிறந்த நாளைப் பகிர்ந்துகொள்கின்றனர் என்றும் இருவரும் ஒரே இலட்சியத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தின் செல்நெறியை ஒருங்கிணைப்பதற்கும் எமது மக்கள் தொடர்ச்சியாக முகங்கொடுத்துவந்த கொடுமைகளையும் அழிவுகளையும் நிறுத்தி மக்களை ஆசுவாசப்படுத்துவதற்கும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று அதன் விளைவாக தோற்றுவிக்கப்பட்ட மாகாணசபை முறைமையை ஏற்று, இணைந்த வடக்கு-கிழக்கு மாகாண அரசாங்கத்தைத் தாபிப்பதில் முன்னின்று செயற்பட்டார். அதனை எம்மக்களுக்கான நிரந்தரத் தீர்வாக அவரோ எமது கட்சியோ ஒருபோதும் கருதவுமில்லை கூறவுமில்லை.
சர்வதேச ரீதியில் ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களின் விடுதலையை அங்கீகரித்து அவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த சர்வதேச போராளியாகவும் அவர் திகழ்ந்ததால் ஒடுக்கப்பட்ட தேசிய இன விடுதலைக்காகப் போராடிய அனைத்து தலைவர்களுடனும் அவருக்கு நெருக்கமான உறவு நிலவியது. ஈழ மக்களின் விடுதலையைப் பொறுத்தவரை இந்தியாவின் தலையீடு இன்றி எத்தகைய தீர்வும் சாத்தியமற்றது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தார். எமது கட்சியின் இன்றைய நிலைப்பாடும் அதுவே.
ஒரு தீர்க்கதரிசியின் தலைமையில் நாங்கள் பயணித்தோம் என்பதிலும் தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதிலும் எமது கட்சி பெருமிதம் கொள்கிறது. அத்தகைய கட்சியை உருவாக்கி தலைமையேற்று நடத்திய எமது செயலாளர் நாயகம் தோழர் க. பத்மநாபாவிற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வன்னி மாவட்டகிளை வவுனியாவில் நிர்மாணித்துள்ள சிலையினை எமது கட்சியின் தலைவரும் எமது செயலாளர் நாயகத்துடன் இறுதிவரை இணைந்து பயணித்தவருமான தோழர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்திருப்பது சிறப்பம்சமாகும்.