அடுத்த சட்டமன்ற தேர்தலில் தானேயில் போட்டியிடுவேன்: ஆதித்ய தாக்கரே!!
உத்தவ்தாக்கரே கட்சியின் மகளிரணியை சேர்ந்த ரோஷிணி ஷிண்டே, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மனைவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதுபற்றி அறிந்த ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் அவரை பிடித்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரோஷிணி ஷிண்டே தானேயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று முன்தினம் உத்தவ்தாக்கரே நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். அப்போது துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை தகுதியற்ற உள்துறை மந்திரி என்று கடுமையாக விமர்சித்தார்.
தானே போலீஸ் கமிஷனரையும் விமர்சித்தார். இந்தநிலையில் தானேயில் நேற்று முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே தலைமையில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டனர். குறிப்பாக முன்னாள் மந்திரிகள் ஜிதேந்திரா அவாத், அனில் பரப் பங்கேற்றனர். தானேயில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நோக்கி சென்றது. பேரணி நிறைவில் தொண்டர்கள் மத்தியில் ஆதித்ய தாக்கரே பேசினார்.
அப்போது முதல்-மந்திரி ஷிண்டேக்கு செல்வாக்கு உள்ள தானேயில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்றும், அந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றும் ஆதித்ய தாக்கரே தெரிவித்தார். மேலும் ஏக்நாத் ஷிண்டேயை கடுமையாக தாக்கி பேசினார். இதனை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் தானே போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆதித்ய தாக்கரே உள்ளிட்டவர்கள் சென்றனர். அங்கு போலீஸ் கமிஷனர் ஜெய்தீப் சிங்கை நேரில் சந்தித்தனர். அப்போது, ரோஷிணி ஷிண்டேயை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரிடம் மனு அளித்தனர்.