;
Athirady Tamil News

கைது செய்யப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆவேசம்: ‘‘அழிப்பவர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற நினைத்ததே நான் செய்த குற்றம்’’!!

0

நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் டிரம்ப், ‘’அழிக்க நினைப்பவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற நினைத்ததே நான் செய்த ஒரே குற்றம்,’’ என்று ஆவேசமாக பேசியுள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஆபாச பட நடிகையான ஸ்டார்மி டேனியல்சுடன் நெருக்கமாக இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது, ஸ்டார்மி டேனியல்ஸ் இது குறித்து பேசாமல் இருக்க அவருக்கு டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் மூலம் ₹85 லட்சம் வழங்கப்பட்டது. இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு-செலவு கணக்கில் சட்ட ரீதியிலானதாக பதிவு செய்யப்பட்டதும் அதற்கான ஆவணங்கள் உறுதியாக உள்ளதால் கிரிமினல் வழக்கில் டிரம்ப் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், 8 கார்கள் அணிவகுக்க நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்த டிரம்ப் அங்கு சரணடைந்தார். அப்போது அவர் சட்டமுறைப்படி கைது செய்யபட்டார். அவரது கைரேகை பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவரது வயது, முன்னாள் வகித்த அதிபர் பதவி கருதிஅவரது கையில் விலங்கு மாட்டப்படவில்லை என நீதிமன்ற தரப்பில் கூறப்பட்டது. நீதிமன்ற விசாரணையின் போது தேவையான போது மட்டுமே கேட்ட கேள்விக்கு டிரம்ப் பதிலளித்தார். மற்றபடி விசாரணை நேரம் முழுவதும் அவர் அமைதியாக இருந்துள்ளார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜூவான் எம் மெர்ச்சனிடம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள 34 குற்றச்சாட்டுகளுக்கும் ‘’நான் நிரபராதி,’’ என்று உறுதியான குரலில் மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் டிசம்பர் 4ம் தேதி நடத்தப்படும் என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். இதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதியும் எதிர்கொள்ளாத கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற அவப்பெயரை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார்.
விசாரணைக்கு பின் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய டிரம்ப் புளோரிடாவில் உள்ள தனது மார்-எ-லாகோ இல்லத்துக்கு சென்றார். அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்களிடையே சுமார் 25 நிமிடம் உரையாற்றிய டிரம்ப், ‘‘அமெரிக்காவில் எனக்கு இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. நான் நிரபராதி. நாட்டை அழிக்க நினைப்பவர்களிடம் இருந்து பயப்படாமல் அதனை காப்பாற்ற நினைத்தது ஒன்று தான், நான் செய்த ஒரே குற்றம். ஒரு போலி வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளேன்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே இந்த வழக்குகள், விசாரணைகள். நான் முன்பை விட தற்போது உறுதியாக இருக்கிறேன். நாட்டை காப்பாற்றும் போராட்டத்தில் இருந்து என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. என் மீது பழி சுமத்தவும், அவதூறு செய்யவும் அழிக்கவும் முயற்சிக்கிறார்கள். இருப்பினும், எனது லட்சியத்தை நிறைவேற்றும் தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறேன்,’’ என்று தெரிவித்தார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுக்கு பிறகு, டிரம்ப் 24 மணி நேரத்தில் ₹32.82 கோடி தேர்தல் நிதி திரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 முறை மட்டுமே பேசிய டிரம்ப்
தன் மீதான 34 குற்றச்சாட்டுகள் தொடர்பாக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் பல மணி நேரம் நடந்த விசாரணையின் போது டிரம்ப் 6 முறை மட்டுமே நீதிபதி மெரச்சனிடம் பதிலளித்து பேசினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ‘‘நான் நிரபராதி’’, ‘‘ஓகே,நன்றி’’, ‘‘புரிகிறது,’’ என்றும் 3 முறை ‘‘ஆம்’’, என மொத்தம் 6 பதிலளித்து பேசினார்.

பைடன் ஆட்சியில் 3ம் உலகப் போர்
தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப் மேலும் கூறுகையில், ‘’பைடனின் ஆட்சி நிர்வாகத்தில் அவரது தலைமையின் கீழ், அணு ஆயுதங்ளினால் தாக்கி கொள்ளும் 3ம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது. சீனா, ரஷ்யா, ஈரான், சவுதி அரேபியா, வடகொரியா நாடுகள் இணைந்துள்ளன. இது அழிவுக்கான கூட்டணியாகும். பைடன், அவரது ஆட்சியினால் அமெரிக்கா நரகமாகி வருகிறது,’’ என்று தெரிவித்தார்.

2024க்கு பிறகும் தொடரும்
இந்திய வம்சாவளி அட்டார்னி ஜெனரல் ரவி பத்ரா கூறுகையில், ‘’டிரம்ப்பின் சட்ட ரீதியிலான பிரச்னைகள் நீடிக்கும். வரும் 2024 அதிபர் தேர்தலுக்கு பிறகும் வழக்கு விசாரணைகள் தொடரும். டிரம்ப் அதிபருக்கான பொது மன்னிப்பு கேட்டாலும் அவரை காப்பாற்ற முடியாது,’’ என்று கூறியுள்ளார்.

டிரம்ப் வழக்கு செலவுக்கு ரூ9.86 கோடி
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில், டிரம்பின் வழக்கு செலவுக்கு ரூ9.86 கோடி வழங்க வேண்டும் என ஸ்டார்மி டேனியல்சுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.