இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு அடுத்த மாதம் முடிசூட்டு விழா!
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். அவர் அரியணையில் ஏறினாலும் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
செங்கோல் ஏந்தி..
இந்த முடிசூட்டு விழாவின் போது பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். மூத்த மதகுருமார்களால் புனிதப் படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். அதன்பின் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்தபடி சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அதே தினத்தில் இங்கிலாந்து ராணியாக கமீலா பார்க்கர் முறைப்படி அறிவிக்கப்படுவார். அரசர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மே 8-ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட், மற்றொரு இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கலே ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2 ஆயிரம் பிரபலங்களுக்கு..
அதுமட்டுமல்லாமல் விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் உள்ள சுமார் 2 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்படவுள்ளன. முடிசூட்டு, பதவியேற்பு விழா மே 6-ம் தேதி வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் உள்ள அப்பே தேவாலயத்தில் விமரிசையாக நடைபெறும்.