தொடக்கப்பள்ளிக்குள் நுழைந்து கொடூரத் தாக்குதல் – 4 பிள்ளைகள் பலி!
பிரேசிலுள்ள தொடக்கப்பள்ளிக்குள் நுழைந்த நபர் ஒருவர் கூறிய ஆயுதத்தினால் மூர்க்கத்தனமாக அங்கிருந்த பிள்ளைகளை தாக்கியதில் 4 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த பிள்ளைகள் 5 வயதில் இருந்து 7 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் நான்கு பிள்ளைகள் காயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
குறித்த சம்பவம் சென்டா கெத்தரீனா (Santa Catarina) மாநிலத்திலுள்ள புளூமெனாவ் (Blumenau) நகரில் நடந்துள்ளது. தொடக்கப்பள்ளி வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்த 25 வயதையுடைய நபர் ஒருவரே இந்தக் கொடூர செயலை புரிந்துள்ளார்.
பின்னர் காவல்நிலையத்தில் அவராகவே சரணடைந்துள்ளதுடன், இவர் இதற்குமுன்னர் 4 முறை கைது செய்யப்பட்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர செயலை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva) வன்மையாக கண்டித்துள்ளார்.
குறித்த சம்பவத்தினால் புளூமெனாவ் நகரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன், இந்த வாரம் நடைபெறவிருந்த உயிர்த்த ஞாயிறு தினக் கொண்டாட்டம் இரத்தாகியுள்ளதுடன், 30 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.