சித்தூர் அருகே பெண் நகை வியாபாரியை தாக்கி 2 கிலோ தங்கம் பறித்துச் சென்ற கும்பல்!!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குடிபாலா பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி உஷா. சீனிவாஸ் குடிபாலா பஜார் பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். வீட்டில் இருந்து தினமும் நகைகளை காரில் கடைக்கு எடுத்துச் சென்று விற்பனை முடிந்து மீண்டும் வீட்டிற்கு நகைகளை எடுத்து வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்த நகைகளை காரில் கடைக்கு எடுத்துச் சென்றனர். இரவு 7 மணி அளவில் வியாபாரம் முடித்து சுமார் 2 கிலோ எடையுள்ள தங்க நகைகளை ஒரு பையில் வைத்து கணவனும் மனைவியும் வீட்டிற்கு காரில் வந்தனர்.
ஸ்ரீனிவாஸ் வீட்டின் பின்புறம் காரை நிறுத்தினார். உஷா காரில் இருந்த நகை பையை எடுத்துக்கொண்டு காரில் இருந்து கீழே இறங்கி நின்றார். அப்போது பைக்கில் வேகமாக வந்த மர்ம நபர்கள் 2 பேர் உஷாவிடம் இருந்த நகைப்பையை பறிக்க முயன்றனர். ஆனால் உஷா நகை பையை கொடுக்காமல் கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் உஷாவை சரமாரியாக தாக்கி உதைத்து கீழே தள்ளிவிட்டனர். உஷா வலி தாங்காமல் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் உஷாவிடம் இருந்த நகை பையை பறித்துக் கொண்டு பைக்கில் வேகமாக தப்பி சென்றனர்.
இது குறித்து சீனிவாஸ் குடிபாலா போலீசில் புகார் செய்தார். டிஎஸ்பி சீனிவாச ரெட்டி, இன்ஸ்பெக்டர் சீனிவாசலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பைக்கில் வந்த மர்ம நபர்கள் மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட பைக்கில் வந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தமிழக ஆந்திர எல்லைகளில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.