மருதமலை முருகன் கோவிலில் லிப்ட் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை- மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்!!
கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். இதனால் எப்போதுமே மருதமலை முருகன் கோவிலில் கூட்டம் அதிக மாக காணப்படும். குறிப்பாக விஷேச நாட்களில் அதிகளவிலான கூட்டம் காணப்படும். இந்நிலையில் மருதமலை முருகன் கோவிலில் மின்தூக்கி(லிப்ட்) அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.5.20 கோடியில் லிப்ட் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மருதமலை முருகன் கோவிலில் ரூ.5.20 கோடியில் லிப்ட் மற்றும் ரூ.3.51 கோடியில் மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் உள்ள தார்சாலையை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது. பூமிபூஜையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
கோவையில் நடந்த விழாவில், கலெக்டர் கிரந்திகுமார், இந்து சமயஅறநிலையத்துறை துணை ஆணையர் தர்ஷினி, துணை மேயர் வெற்றிச் செல்வன், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர். அதை தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க வேள்வி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். இதில் தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, வடவள்ளி பகுதி செயலாளர் வ.ம.சண்முக சுந்தரம், வட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் , கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.