;
Athirady Tamil News

பிரதமரின் கடிதம் தமிழ் மக்கள் மீதான அன்பை காட்டுகிறது- கடிதம் பெற்ற கோவை துளசியம்மாள் பேட்டி!!

0

கடந்த ஆண்டு நவம்பரில் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து பலரும் பங்கேற்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டது. இந்த ரெயில்கள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தமிழர்கள், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அந்த வகையில் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்த துளசி அம்மாள், ராஜாமணி ஆகியோரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு 2 பேரும் சொந்த ஊருக்கு வந்தனர்.

பின்னர் 2 பேரும், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தமைக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தும், காசி தமிழ் சங்கம நிகழ்வுகள் குறித்தும் கடிதம் எழுதி அனுப்பினர். இந்நிலையில் கோவை பெண்களின் பாராட்டு கடிதத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதுவும் அந்த கடிதத்தை தமிழிலேயே எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இந்தியா ஒரு பன்முக தன்மை கொண்ட நாடு. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கலாசாரத்தை ஒன்றிணைப்பதே மத்திய அரசின் நோக்கம். காசியில் நடந்த கலாசாரங்கள் மற்றும் மொழிகளின் சங்கமத்தில் நீங்கள் சிறந்த அனுபவத்தை பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

நம் நாட்டின் பன்முகத் தன்மையை கண்டு உலகமே வியக்கிறது. அந்த பன்முகத்தன்மையே நம்மை பிணைக்கும் ஒற்றுமையின் இழையாகும். காசிக்கும், தமிழக மக்களுக்கும் இடையேயான உவு, பண்பாட்டு ஒற்றுமையை வெளிக்காட்டுகிறது. பல பகுதிகளின் கலாசாரம் மற்றும் நாகரிக பிணைப்புகளை வலுப்படுத்துவதே ஒரே பாரதம் என்பதன் நோக்கமாகும். காசி தமிழ் சங்கத்தின் மீது நீங்கள் காட்டிய அன்பும், ஈடுபாடும் நாட்டை ஒன்றிணைக்கும் எனது முயற்சிக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. என பிரதமர் மோடி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். தாங்கள் பாராட்டி எழுதிய கடிதத்திற்கு, நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதியதை நினைத்து துளசியம்மாளும், ராஜாமணியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து துளசி அம்மாள் கூறியதாவது:- காசி தமிழ் சங்க நிகழ்வுக்கு சென்றதும், அங்குள்ள மக்கள் எங்களை வரவேற்றதும் மன மகிழ்ச்சியை தருகிறது. நான் அங்கு சென்ற போது, அங்குள்ள கோவில்கள், ராமர் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று தரிசித்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகள் தமிழர்களையும், தமிழையும்வளர்க்க உதவும். சாதாரண கிராமத்து வாசியான நான் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதுவும் தமிழிலேயே கடிதம் அனுப்பியது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமரின் இந்த செயல், தமிழக மக்கள் மீதும், தமிழ் மீதும் கொண்டுள்ள அன்பினை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.