பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: தடையால் தாமதமாகும் !!
நீதிமன்ற விடுமுறை காரணமாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து நீதிமன்றத்துக்கு செல்வதற்கு உள்ள தடைகளை கருத்திற்கொண்டு, அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை இன்னும் சில வாரங்களுக்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
குறித்த சட்டமூலம் கடந்த 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே சட்டமூலத்தை சமர்ப்பிப்பது தாமதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் அரசாங்கம் என்ற வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த சட்டமூலம், இம்மாத இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்ற புதிய சட்டமூலம் மார்ச் 23 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிலையில், இது தற்போதைய 1979 ஆம் ஆண்டின் பபயங்கரவாதத் தடைச் சட்டத்தை திறம்பட நீக்கித் திருத்துஞ் சட்டமூலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட காலத்திலிருந்தே சிவில் சமூகம் மற்றும் சட்ட நிபுணர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குறித்த சட்டமூலம், நாட்டின் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக, எதிர்க்கட்சிகள், சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல்வேறு சிவில் மற்றும் வெகுஜன அமைப்புகள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பின் 121வது பிரிவின் கீழ், சட்டமூலமொன்றை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படின், நிலையியற் கட்டளை 55(2)ன் பிரகாரம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பின்னர், குறித்த சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்கு நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.