அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களத்தில் ரொபர்ட் எவ் கென்னடி ஜூனியர்!!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடியின் சகோதரரின் மகனான ரொபர்ட் எவ் கென்னடி ஜூனியர் எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
1963 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடியின் சகோதரர்களில் ஒருவர் ரொபர்ட் எவ் கென்னடி. அமெரிக்க சட்ட மா அதிபராகவும் செனட்டராகவும் பதவி வகித்த ரொபர்ட் எவ் கென்னடியும் 1968 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக்க கட்சியின் வேட்பாளராகுவதற்கான போட்டியிடுவதற்கான உட்கட்சித் தேர்தலில் பங்குபற்றிய வேளையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ரொபர்ட் எவ் கென்னடியின் மகனான ரொபர்ட் எவ் கென்னடி ஜூனியர் அடுத்த வருட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார்.
ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயக் கட்சியின் சார்பில் வேட்பாளராகுவதற்கான உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆவணங்களை ரொபர்ட் எவ் கென்னடி ஜூனியர் தாக்கல் செய்துள்ளார்.
இத்தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடக் கூடும் என்பதை ஜனாதிபதி பைடன் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், தான் வேட்பாளராகவுள்ளதாக பைடன் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
69 வயதான ரொபர்ட் எவ் கென்னடி ஜூனியர், சட்டத்தரணி ஆவார். கொவிட் பெருந்தொற்று பரவலுக்கு முன்பிருந்தே தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர் இவர். இதனால், கென்னடி குடும்பத்திலும் சர்ச்சை ஏற்பட்டது. அவர் மிக ஆபத்தானவர என அவரின் சகோதரி கேரி கென்னடி 2021 ஆம் ஆண்டு விமர்சித்திருந்தார்.