தாய்வானைச் சூழ்ந்த பகுதிகளுக்கு போர்க்கப்பல்களை அனுப்பியது சீனா!!
தாய்வானைச் சுற்றியுள்ள கடல்பகுதிகளுக்கு தனது போர்க் கப்பல்களை சீனா இன்று அனுப்பியுள்ளது.
அமெரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகரை தாய்வான் ஜனாதிபதி சந்தித்தமைக்கு வலிமையான உறுதியான பதில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சீனா கூறியுள்ள நிலையில் இப்போர்க்கப்பல்கள் தாய்வானுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தாய்வான் ஜனாதிபதி சான் இங் வென், அமெரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கர்த்தியை லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதுபோன்ற சந்திப்புகளுக்கு சீனா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கரின் அப்போதைய சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கு விஜயம் செய்தபோது, சீனா தனது மிகப் பொரிய கடல்சார் போர்ப்பயிற்சியை தாய்வானைச் சூழ்ந்த பகுதிகளில் நடத்தியிருந்தது.
70 வருடங்களாக தாய்வான் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றபோதிலும், அதனை தனது ஒரு பிராந்தியம் என சீனா கூறுகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி சான் இங் வென், சபாநாயகர் கெவின் மெக்கர்த்தி சந்திப்பு
நடைபெறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் விமானம் தாங்கிக் கப்பலொன்றை தாய்வானின் தென் பகுதிக்கு சீனா அனுப்பியது. இந்நிலையில், சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையிலான கடற்பகுதியில் சீனாவின் மேலும் 3 போர்க் கப்பல்கள் இன்று அவதானிக்கப்பட்டதாக தாய்வானின் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.