தூதரகங்களை மீண்டும் திறக்க சவுதி, ஈரான் சம்மதம் – சீன முயற்சிக்கு வெற்றி!
இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மூடிய தூதரகங்களை திறப்பதாக ஈரானும் சவுதியும் சம்மதம் தெரிவித்துள்ளன.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த காலங்களில் கடைபிடித்து வந்தன. தற்போது பகையை மறந்து நட்புறவில் இரு நாடுகளும் ஈடுபடத் தொடங்கியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. ஈரான் – சவுதி அரேபியா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை வளைகுடா நாடுகளின் பாதுகாப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், இரு நாடுகளுக்கு இடையேயான வெறுப்பை மறந்து பரஸ்பர உறவை மேம்படுத்த சீனா அரசியல் தூதராக செயல்பட்டு வருகிறது.
அதன் ஓர் அங்கமாக, மோதல் காரணமாக மூடிய தூதரகங்களை திறப்பதாக சவுதியும் ஈரானும் அறிவித்துள்ளன. சீன தலைநகர் பீஜிங்க்கில் நடந்த சந்திப்பில் சவுதி – ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இதனைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், “இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு எதிர்வரும் அனைத்து தடைகளையும் அகற்றுவதற்கு இரு தரப்பினரும் தயார் நிலையில் இருப்போம். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் ரியாத்திலும், தெஹ்ரானிலும் மூடப்பட்ட தூதரகங்கள் மீண்டும் திறக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
இரு நாடுகளின் முடிவு குறித்து சீனா, “இது பேச்சுவார்த்தைக்கான வெற்றி. அமைதியான வெற்றி. உலகின் முக்கிய பிரச்சினைகளை முறையாக தீர்க்க சீனா ஆக்கப்பூர்வமான பங்கினை ஆற்றி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக வசிக்கும், மதகுருவைத் தலைவராகக் கொண்ட நாடான ஈரானுக்கும், சன்னி பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்டு, முழுமையான முடியாட்சி கொண்ட நாடான சவுதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகைமை இருந்து வந்தது. இதற்கிடையில்தான் புது மோதல் வெடித்தது. அதாவது, சவுதி அரேபியாவில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அராம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும், இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் – சவுதி இடையே பதற்றம் நீடித்தது. இரு நாடுகளும் தூதரகங்களை மூடின. இந்த நிலையில், சீனாவின் முயற்சியுடன் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.