விலை மதிப்பில்லா நவரத்தினங்கள், நகைகள் இங்கி. அரச குடும்ப சொத்தாக மாறிய இந்திய பொக்கிஷங்கள்: காலனித்துவ கால ஆவணத்தில் குறிப்பு!!
இங்கிலாந்தின் ‘தி கார்டியன்’ பத்திரிகை ‘காஸ்ட் ஆப் தி கிரவுன்’ என்ற தலைப்பில் தொடர் வெளியிட்டு வருகிறது. அதில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்த இந்திய அலுலகத்தின் ஆவணக்காப்பக்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட காலனித்துவ கால ஆவணத்தில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த 46 பக்க ஆவணத்தில், இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸின் கருவூலத்தில் இடம் பெற்றுள்ள மரகத கற்கள் பதிக்கப்பட்ட பெல்ட் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது 1799ல் பஞ்சாப்பில் சீக்கிய அரசை நிறுவிய அரசர் ரஞ்சித் சிங் தனது லாயங்களில் குதிரைகளை அலங்கரிக்க பயன்படுத்தியதாகும்.
இந்த மரகத பெல்ட் எவ்வாறு விக்டோரியா மகாராணியின் வழங்கப்பட்டது என்பதும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரஞ்சித் சிங்கின் மகன் துலீப் சிங்கை கட்டாயப்படுத்தி கிழக்கிந்திய கம்பெனியிடம் கையெழுத்திட வைத்தது, அதன் மூலம் கோஹினூர் வைரம் இங்கிலாந்து அரச குடும்பத்தின் வசமாக்கப்பட்ட தகவலும்இடம் பெற்றுள்ளன. மேலும், விலை உயர்ந்த 4 பெரிய ரூபி கற்கள் பதிக்கப்பட்ட வைரத்தில் ஜொலிக்கும் நெக்லசும், 224 விலை உயர்ந்த பெரிய முத்துக்களுடன் கட்டப்பட்ட முத்து மாலையும் அரச குடும்பத்து கஜானாவுக்கு வந்தது குறித்த தகவல்கள் உள்ளன.