வடகொரிய தொழிலாளர்களை யாரும் பணி அமர்த்தக் கூடாது: உலக நாடுகளுக்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரிய அழைப்பு!!
வடகொரியா தொழிலாளர்களை பணியமர்த்த வௌிநாடுகள் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஜப்பானை குறி வைத்தும் வடகொரியா ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், தென்கொரிய நாடுகள் கூட்டாக ஒரு அறிக்கையை வௌியிட்டுள்ளன.
அதில், “ஏராளமான வடகொரிய தொழிலாளர்கள் ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு வௌிநாடுகளில் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனுப்பும் பணத்தை வடகொரிய அரசு அணுஆயுத சோதனைகளுக்காக பயன்படுத்தி வருகிறது. மேலும் கிரிப்டோ கரன்சி திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைள் மூலமாகவும் வடகொரியாவின் அணுஆயுத, ஏவுகணை சோதனைகளுக்கு நிதியுதவி கிடைக்கிறது. எனவே, வடகொரியாவின் அணுஆயுத திட்டத்துக்கு உதவும் வௌிநாட்டு தொழிலாளர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என ஐநா நிறைவேற்றிய தீர்மானத்தை அனைத்து நாடுகளும் நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.