ஜனநாயகம் ஆபத்தில் இல்லை; குடும்ப அரசியலுக்கே அச்சுறுத்தல்: ராகுல் காந்திக்கு அமித்ஷா பதிலடி!!
லண்டன் நகரில் சமீபத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு ஆளும் பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் நேற்று பதிலடி கொடுத்துள்ளார். உத்தரபிரதேசத்தின் கவுஷாம்பி நகரில், கவுஷாம்பி மகோத்சவத்தை தொடங்கி வைத்து பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி இந்திய ஜனநாயகத்தில் 3 விதமான காயங்களை ஏற்படுத்தி இருந்தது.
அதாவது சாதியவாதம், குடும்ப அரசியல் மற்றும் திருப்திபடுத்தும் அரசியல் ஆகியவை. ஆனால் பிரதமர் மோடி இந்த மூன்றையும் தோற்கடித்து விட்டார். அதனால் நீங்கள் அஞ்சுகிறீர்கள். இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சகோதரரே, ஜனநாயகம் ஆபத்தில் இல்லை, உங்கள் குடும்பம்தான் ஆபத்தில் இருக்கிறது. இந்தியாவின் கோட்பாடு ஆபத்தில் இல்லை, உங்கள் குடும்ப அரசியல்தான் ஆபத்தில் இருக்கிறது. உங்கள் குடும்பத்தின் எதேச்சாதிகாரம்தான் ஆபத்தில் இருக்கிறது.
நாடாளுமன்றம் நேற்று (நேற்று முன்தினம்) ஒத்திவைக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு அமர்வோ, விவாதமோ இன்றி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தது இல்லை. ஆனால் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் தொடர் முடக்கப்பட்டு இருக்கிறது. ராகுல் காந்தியுடன் 17 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இதுவரை தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ராகுல் காந்தி சட்டத்தை பின்பற்றி மேல்கோர்ட்டை நாடி நிவாரணம் பெற வேண்டும். நண்பர்களே, ஒவ்வொரு குடிமகனின் ‘தர்மமாக’ இருக்கும் சட்டத்தை அவர் பின்பற்ற வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் சொல்ல விரும்புகிறேன்.
நீங்கள் எம்.பி.யாக இருந்தீர்கள். தண்டனையை எதிர்த்து கோர்ட்டில் போராடியிருக்கலாம். ஆனால் நாடாளுமன்ற நேரத்தை வீணடித்துள்ளீர்கள். இதற்காக எதிர்க்கட்சிகளை இந்த நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ராமபிரான் பிறந்த இடமான அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என நாமெல்லாம் விரும்பினோம். ஆனால் காங்கிரஸ் கட்சி அதை கிடப்பில் போட்டது. சமாஜ்வாடி திசைதிருப்பியது.
பகுஜன் சமாஜ் தவிர்த்தது. ஆனால் கோவிலுக்கான அடிக்கல்லை மோடிஜி நாட்டினார். விரைவில் ராமபிரான் தனது கோவிலில் அமர்ந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். பிரதமர் மோடி, நாட்டை வளமாக்கி அதன் பெருமையை உயர்த்தியுள்ளார். 2024-ம் ஆண்டு தேர்தலிலும் அவரையே மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்து விட்டனர். இவ்வாறு அமித்ஷா கூறினார்.