நாடளாவிய ரீதியில் 3,200 அதிகாரிகள் பரிசோதனை!!
சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மிகவும் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனால், உணவு பொருட்களை உரிய முறையில் பார்த்து கொள்வனவு செய்யுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி வரை, உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் உணவுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் விசேடமாக பண்டிகை காலத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் மற்றும் அவற்றுக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தொடர்பில் ஆராயப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 3,200 அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், இதன்போது முறைகேடான சம்பவங்கள் இடம்பெற்றால் அவை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
அதேநேரம் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஏதேனும் செயற்பாடுகள் இடம்பெற்றால், அவற்றை 011 263 5675 என்ற பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தொலைபேசி இலக்கத்துக்கு பொதுமக்கள் அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.