அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவது தொடரும் – தைவான் அதிபர்!
தைவானை சீனா சொந்தம் கொண்டாடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சுதந்திர தீவு நாடாக அறிவித்து கொண்டுள்ள தைவான், தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது.
அதேசமயம், தைவான் அமெரிக்கா உள்ளிட்ட உலகிலுள்ள மற்ற ஜனநாயக நாடுகளுடனும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என அந்நாட்டின் அதிபர் சாய் இங்-வென் கூறியுள்ளார்.
தைவான் அதிபர் சாய் இங்-வென்னின் அமெரிக்க பயணத்தை தொடர்ந்து, சீனா சனிக்கிழமை தைவான் ஜலசந்தியை சுற்றி மூன்று நாள் இராணுவப் பயிற்சியை அறிவித்துள்ளது.
சீனா தனது இராணுவ நடவடிக்கையை தைவான் நீரிணையில் மூன்று நாட்கள் தொடரவிருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில், தைவானிய அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தைவானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உள்ளதுடன், சீனா தனது அதிகாரத்தை தைவானுக்குள் புகுத்தும் முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.