புலம்பெயர்ந்தோரின் வங்கிக்கணக்குகளுக்கு ஆபத்து – பிரித்தானிய அரசு அதிரடி..!
பிரித்தானியாவில் சட்ட விரோதமாக வாழ்பவர்கள் என சந்தேகிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் வங்கிக்கணக்குகளுக்கு ஆபத்து உருவாகியுள்ளது.
குறித்த நடவடிக்கையில் சட்ட விரோதமாக வாழ்பவர்கள் என உறுதியாகும் புலம்பெயர்ந்தோரின் வங்கிக்கணக்குகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
பிரித்தானியா, நீண்ட காலமாகவே சட்ட விரோத புலம்பெயர்தலையும், பிரித்தானியாவுக்கு சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் வேலை செய்வதையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
இந்நிலையில், உள்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் நிதி சேவைகளை அணுகுவதை மேலும் கடினமாக்குவது, சட்ட விரோதமாக புலம்பெயர எண்ணுவோரை ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கச் செய்யவைக்கும் முக்கிய கருவியாகும்.” என்று கூறியுள்ளது.
அதாவது, வங்கி ஊழியர்கள் நேரடியாக தங்கள் வாடிக்கையாளர்களின் ஆவணங்களையோ அவர்களுடைய புலம்பெயர்தல் நிலையையோ சோதிக்கமாட்டார்கள்.
அதற்கு பதிலாக, உள்துறை அலுவலகம், பிரித்தானியாவிலுள்ள வங்கியில் கணக்கு வைக்க தகுதியற்றவர்கள் என கருதப்படுவோர் குறித்த விவரங்களை பகிர்ந்துகொள்ளும்.
வங்கிகள் அப்படிப்பட்டவர்களின் கணக்குகளை சோதிக்கும்.
அதைத் தொடர்ந்து உள்துறை அலுவலகம், குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரித்தானியாவில் அனுமதியின்றி தங்கியிருக்கிறாரா என்பதை உறுதி செய்ய, மேலும் ஒரு சோதனையை நடத்தும்.
சோதனையில், அவர் பிரித்தானியாவில் அனுமதியின்றி தங்கியிருக்கிறார் என்பது உறுதியாகும் நிலையில், அவரது வங்கிக்கணக்கு மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.