;
Athirady Tamil News

விவேகானந்தரின் கொள்கைகளை நிறைவேற்ற இந்தியா பாடுபடுகிறது- பிரதமர் மோடி பேச்சு!!

0

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125ஆவது ஆண்டு விழா விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:- சென்னையில் 125 ஆண்டுகளை நிறைவு செய்த ராமகிருஷ்ண மடத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விவேகானந்தர் இல்லத்தை காணக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. தமிழ் மொழி, தமிழ் பாரம்பரியத்தை மிகவும் விரும்புகிறேன். நான் தமிழக மக்களையும் சென்னையையும் மிகவும் நேசிக்கிறேன். ராமகிருஷ்ண மடம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன்தாக்கம் எத்தகையது என உணர்ந்திருக்கிறேன். சுவாமி விவேகானந்தர் பெங்காலில் இருந்து வந்தவர். அவர் ஒரு கதாநாயகனைப்போல் தமிழகத்தில் வரவேற்கப்பட்டார்.

இது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்ச்சியை இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நமக்கு தருகின்றன. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இந்த உணர்ச்சியோடுதான் ராமகிருஷ்ண மடங்கள் பணியாற்றுகின்றன. எந்த சுயநலமும் இன்றி இங்கே இருக்கின்ற துறவிகள் பணியாற்றுகிறார்கள். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதை காசி தமிழ் சங்கமத்தில் கூட நான் பார்த்தேன். இப்போது சவுராஷ்டிர தமிழ் சங்கமம் நடக்கவிருக்கிறது. இதைப்போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் வெற்றி பெற வேண்டும். எங்கள் அரசாங்கத்தின் கொள்கைகளும் விவேகானந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவை. அனைவருக்கும் சமமான ஒரு நிலையை உறுதிப்படுத்தனால் சமூகம் முனனேறும் என அவர் கூறினார். முன்னால் நடந்த ஆட்சியில் அடிப்படை வசதிகள்கூட ஏழை மக்களுக்கு அளிக்கப்படவில்லை.

இதனால், இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். உலக தரத்திலான கல்விக்காக புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. எங்களின் முத்ரா யோஜனா திட்டம் இன்று 8வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. இந்த திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் பல தொழில் முனைவோர் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றியிருக்கிறார்கள். இந்த திட்டத்தின்மூலம் சிறு உற்பத்தியாளர்களுக்கு கடன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் இந்த கடன் வசதி தரப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு வங்கியில் கடன் பெறுவது என்பது பெரிய மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்தது. இதை நாம் மாற்றியிருக்கிறோம்.

மின்சாரம், எரிவாயு இணைப்பு, குடிநீர், கழிப்பறை போன்றவைகளை நாங்கள் அளித்துவருகிறோம். சுவாமி விவேகானந்தர் இந்தியாவைப் பற்றி பெரிய பார்வையை கொண்டிருந்தார். இப்போது இந்தியா அவரது கொள்கைகளை நிறைவேற்ற பாடுபட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அவர் மேலிருந்து பார்த்து மகிழ்ச்சி அடைவார் என்று நினைக்கிறேன். நமக்கு நம் மீது நம்பிக்கை இருக்கவேண்டும், நாட்டின் மீது நம்பிக்கை இருக்கவேண்டும் என அவர் கூறினார். அதை அடையும் நாள் இந்தியா நூற்றாண்டு விழா காணும் நாளாக இருக்கும். இப்போது நம்முடைய நேரம். உலக நாடுகளை நாம் நல்ல நம்பிக்கையோடும் மரியாதையோடும் எதிர்கொள்கிறோம். நம் இளைஞர்கள் அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கும்போது நாட்டை முன்னேற்ற தயங்க மாட்டார்கள். விவேகானந்தரின் தத்துவங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவை. கல்வியே ஒருவனை வலிமை உள்ளவனாக ஆக்கும் என அவர் நம்பினார். தொழில்நுட்ப கல்வியும் அனைத்து விதமான உயர் கல்வியும் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும் என அவர் நினைத்தார்.

உலகிலேயே மிகச்சிறந்த தொழில்நுட்ப அறிவியல் களம் நம் நாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து விவேகானந்தர் கூறிய கருத்துக்கள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மிகவும் பொருத்தமாக உள்ளது. பஞ்ச பிரான் கொள்கைகளை அனுசரித்து ஒரு உச்ச நிலைக்கு நாம் கொண்டு வரவேண்டும். காலனிய மனப்பான்மையை நீக்குதல், நம்முடைய பாரம்பரியத்தை வளர்த்தல், நமது ஒற்றுமையில் கவனம் செலுத்துதல் போன்ற விஷயங்கள்தான் இந்த பஞ்ச பிரானத்தில் வருகிறது. இந்த பஞ்ச பிரானத்தை நிறைவேற்ற 130 கோடி மக்களும் முடிவெடுத்தால் நாடு நிச்சயமாக முன்னேறும். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.