அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் பரபரப்பு: துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பதற்றம்!!
அமெரிக்காவின் ஓக்லஹாமா பல்கலைக்கழக வளாகத்தில் தூப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக எழுந்த புகாரை அடுத்து அங்கு போலீஸார் குவிந்தனர்.
இது தொடர்பாக சில மாணவர்கள் எழுப்பிய அச்சத்தையடுத்து ஓக்லஹாமா பல்கலைக்கழக நிர்வாகம் அதன் ட்விட்டர் பக்கத்தில், “பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு துப்பாக்கி ஏந்திய நபர் இருப்பதாக தகவல். வான் வ்ளீட் ஓவல் பகுதியில் அவர் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் ஓடுங்கள், ஒளிந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் எதிர்த்து சண்டையிடுங்கள்” என்று ட்வீட் செய்திருந்தது.
அதன்பின்னர் சில மணி நேரங்களில் துப்பாக்கிச் சூடு ஆபத்து விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று ட்வீட் செய்யப்பட்டது. அதேவேளையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டில் (2022) மட்டும் துப்பாக்கி தொடர்பான வன்முறையில் 44,000 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கடைசியாக நாஷ்வில் பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அதிபர் ஜோ பைடன், “துப்பாக்கி வன்முறை ஒரு தொற்றுநோய். நாடாளுமன்றம் இப்போது இதற்கு எதிராக செயல்பட்டே ஆக வேண்டும். நமக்கு தேவையானது துப்பாக்கி சட்டத்தில் திருத்தங்கள் தேவை” என்று கூறியிருந்தார்.