;
Athirady Tamil News

நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு சொந்தமான வெள்ளி பொருட்கள் பறிமுதல்!!

0

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹெப்பால் சுங்கச்சாவடி அருகே பெங்களூரு-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் அதிகாரிகளும் வாகன தணிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், அந்த வழியாக மராட்டிய பதிவு எண்ணுடன் வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி அவர்கள் சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் குவியல், குவியலாக வெள்ளிப் பொருட்கள் இருந்தன.

அதாவது வெள்ளி ஆபரணங்கள், வெள்ளி கிண்ணங்கள், கரண்டிகள், வெள்ளி தட்டுகள் என்று மொத்தம் 66 கிலோ வெள்ளிப்பொருட்கள் இருந்தன. இதுபற்றி கார் டிரைவர் மற்றும் அதில் பயணம் செய்த ஒருவரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கார் டிரைவர் சுல்தான் கான் என்பதும், மற்றொருவரின் பெயர் ஹரிசிங் என்பதும் தெரியவந்தது. அந்த வெள்ளி பொருட்கள் மறைந்த பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதைத்தொடர்ந்து போலீசார், 66 கிலோ வெள்ளிப் பொருட்களையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

வெள்ளிப்பொருட்களின் மதிப்பு ரூ.39 லட்சம் ஆகும். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வெள்ளி பொருட்களுடன் சிக்கிய கார், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் பைவியூ புராஜெக்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் உள்ளது என்பதும், சென்னையில் இருந்து அந்த காரில் வெள்ளி பொருட்களை மும்பைக்கு கொண்டுபோவதும் தெரியவந்தது. அதுபற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.