வரும் மே 2ம் தேதி முதல் புதிய அலுவலக நேரம்- பஞ்சாப் அரசு அறிவிப்பு !!
பஞ்சாப் மாநிலத்தில் வரும் மே மாதம் 2ம் தேதி முதல் அலுவலக நேரத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். தற்போது மாநில அரசுத் துறைகளின் அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. இந்நிலையில், வரும் மே மாதம் 2ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு மூடப்படும் என்று பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய அலுவலக நேரம் ஜூலை 15ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மாநில அரசு ஊழியர்கள் உள்பட பலருடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாக முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.
மேலும், கோடை காலத்தில் அலுவலக நேர மாற்றம், மின் தேவையின் சுமையை குறைக்கும் என்றார். பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், மதியம் 1.30 மணிக்கு மேல் பீக் லோட் (மின்சாரம்) தொடங்கும் என்றும், மதியம் 2 மணிக்கு அரசு அலுவலகங்கள் மூடப்பட்டால், பீக் லோட் 300 முதல் 350 மெகாவாட் வரை குறைக்க உதவும் என்றும் முதல்வர் கூறினார். பகலில் வெப்பமான காலநிலையின் உச்ச நேரம் தொடங்கும் முன், அரசு அலுவலகங்களில் தங்கள் வேலையைச் செய்து முடிப்பதால், இந்த முடிவு சாமானிய மக்களுக்கும் பயனளிக்கும் என்றும் முதல்வர் கூறினார். இதைதவிர, ஊழியர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும், தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட முடியும் என்பதால் இது அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.