முழு அடைப்பு காலத்தில் குழந்தைகளின் மனவளர்ச்சி திறன் பாதிப்பு- டாக்டர்கள் தகவல்!!
கொரோனா தொற்று பரவல் கடுமையாக இருந்த போது முழு அடைப்பு போடப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த முழு அடைப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டுக்குள் சிறைப்பட்டு கிடந்தனர். வெளி பழக்க வழக்கங்கள் இல்லாமல் குழந்தைகள் மனவளர்ச்சி இல்லாதது போல் இருந்தனர். பிறந்த குழந்தைகளால் சரிவர பேச முடியாமல், குழந்தைகள் தங்கள் இயல்பான ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பை இழந்தனர். சக குழந்தைகளுடன் விளையாட முடியாமல் பெற்றோர், உறவினர்களுடன் பழக முடியாமல் விலகி செல்போன்களில் மூழ்கினர். இதன் தாக்கம் அவர்களின் மன வளர்ச்சியில் தற்போது காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தங்கள் குழந்தைகள் சரியான வார்த்தைகளைப் பேச முடியாததால் பெற்றோர்கள் மருத்துவமனைகளை நாடி செல்வது அதிகரித்துள்ளது. விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மனநலப் பிரிவுக்கு வாரத்திற்கு 20 பேர் வரை இதுபோன்ற குழந்தைகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருகின்றனர். இதனால் பேச்சு பயிற்சி சிகிச்சையாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. கொரோனா பரவலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு, பிறந்த குழந்தைகளின் வயது இப்போது 3-5 வயதுக்குள் உள்ளது. அவர்களின் உடல் வளர்ச்சியைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், சில குழந்தைகள் இயற்கையான மன முதிர்ச்சி குறைவாக இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.
பேச்சுத் திறன் இல்லாமை, பதிலளிக்காதது போன்ற குறைபாடுகளைக் கண்ட பெற்றோர் மருத்துவர்களை தொடர்பு கொள்கின்றனர். ப்ளே ஸ்கூல் அல்லது நர்சரியில் சேர்க்கப்படும் வயதில், பேச்சு சிகிச்சையாளர்களிடம் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். குழந்தைகள் இயல்பான நிலையில் இல்லாததால் 3 ஆண்டுகளுக்குப் பிறகும், எல்கே.ஜியில் சேர்க்க முடியவில்லை.
இப்போது குழந்தைகளுக்கு வார்த்தைகளைக் கற்றுக் கொடுப்பதே எங்கள் வேலையாகிவிட்டது’ என்கிறார் விஜயவாடாவைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தை. இது சம்பந்தமாக விஜயவாடா அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் உளவியலாளர் துர்காபிரசாத் என்பவர் கூறியிருப்பதாவது:- கொரோனா முழு அடைப்பு காரணமாக குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்பு இல்லாததால் குழந்தைகளின் பேச்சு மெதுவாக உள்ளது. பெற்றோர் இருவரும் வேலை செய்யும் குடும்பங்களில் இந்த பிரச்சனை அதிக அளவில் உள்ளது. குழந்தைகள் 2 வயது வரை செல்போன் மற்றும் டிவியிலிருந்து விலகி இருக்க வேண்டும். குழந்தை பருவத்தில் சுற்றுச்சூழலை கவனிப்பதன் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது என்றார்.