பஸ் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
பேரூந்துகளில் பயண சீட்டுகள் (tickets) பெற்றுக் கொள்ள பணத்திற்கு பதிலாக அட்டையை செலுத்தி பயண சீட்டைப் பெறும் புதிய திட்டத்தை இவ்வருடம் அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப பயணிகள் QR code முறையைப் பயன்படுத்தி பஸ் பயணச் சீட்டுகளைப் பெறுவதற்காக புதிய தொழிநுட்ப முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் டிப்போக்களுக்கு புதிய பேரூந்துகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த நிகழ்வு, நேற்று (9) நுவரெலியாவின் கிறகரி வாவிக்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
நுவரெலியவிலுள்ள 7 இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களுக்கு 26 புதிய பேரூந்துகள் நேற்று கையளிக்கப்பட்டன.
புதிய பேருந்துகளை தோட்டம் மற்றும் கிராமப்புற வீதிகளில் இயக்கவும், அதன் மூலம் கிராமப்புற மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளின் உள்ளக வீதிகளில் பொதுப் போக்குவரத்துச் சேவையை வலுப்படுத்தி, மக்களுக்கு வழக்கமான போக்குவரத்து வசதிகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்” என்று அமைச்சர் கூறினார்.