ஜெர்மனியில் நடைபெற்ற முட்டை வீசும் போட்டியில் பல மீட்டர் தூரம் வீசுபவர்களுக்கு பரிசு..!!
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஜெர்மனியில் நடைபெற்ற முட்டை வீசும் போட்டி பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து, 3-ம் நாள் உயிர்ப்பித்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். நேற்று நள்ளிரவு, ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஜெர்மனியில் ஹோர் ஹவுசன் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் முட்டை வீசும் போட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வார்கள்.
கொரோனாவால் 3 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த முட்டை வீசும் போட்டி இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் பல வண்ணங்களில் சாயமிடப்பட்ட முட்டைகளை கையில் எடுத்த போட்டியாளர்கள் அதனை பல மீட்டர் தூரம் தூக்கி எரிந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். முட்டையை வீச ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிக தூரம் முட்டைகளை வீசிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.