மும்பையில் புதுப்பிக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சதுக்கம் திறப்பு !!
பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த ”தினத்தந்தி” அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், விளையாட்டு, கல்வி, ஆன்மிகம் போன்ற துறைகளிலும் இமாலய சாதனை படைத்தவர். மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சாதனைகளை நினைவுகூரும் வகையில் அவரது பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் உள்ள சயான்- பாந்திரா இணைப்பு சாலையில் சதுக்கம் அமைக்கப்பட்டது. சதுக்கத்தை அப்போதைய மும்பை மாநகராட்சி மேயர் சினேகல் அம்பேகர் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் தற்போது தெலுங்கானா கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தற்போது டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சதுக்கம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. புதுப்பிக்கப்பட்ட அந்த சதுக்கத்தை நேற்று முன்தினம் இரவு நடந்த விழாவில், மகாராஷ்டிர முன்னாள் மந்திரியும், தாராவி எம்.எல்.ஏ.வுமான வர்ஷா கெய்க்வாட் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தாராவியில் உள்ள காமராஜர் பள்ளியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் வளாகத்தில் நடந்த விழாவிற்கு திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் சபேஷன் ஆதித்தன், செயலாளர் ஜெகதீஸ் சவுந்தர் முருகன், தெட்சணமாற நாடார் சங்க செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் செல்வராஜ், மும்பை கிளை சேர்மன் காசிலிங்கம், செயலாளர் மைக்கிள் ஜார்ஜ், பொருளாளர் பொன்ராஜ், பாக்கியநாதன், நடராஜன், ரெம்ஜிஸ், ஆனந்த் செல்வம், ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “காமராஜர் பள்ளி கட்டுமான பணியின் போது பா.சிவந்தி ஆதித்தனாருடன் எனது தந்தை இணைந்து பணியாற்றினார். அப்போது, இங்கு வந்திருந்த பா.சிவந்தி ஆதித்தனாரின் கம்பீர தோற்றத்தை பார்த்து நான் வியந்திருக்கிறேன். கல்வி துறையில் அவர் ஈடுபாட்டுடன் செயல்பட்டார். நானும் கல்வி மந்திரியாக இருந்துள்ளேன். இனி வரும் காலங்களிலும் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மும்பையில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுக்கும் பா.சிவந்தி ஆதித்தனாரை தெரியும். மும்பை தமிழர்களுக்கு தமிழ்மொழி மூலம் செய்தியை கொண்டு சேர்த்தவர் அவர். சங்கத்தில் யார் பொறுப்பில் இருந்தாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்” என்றார்.
விழாவில் ஹரிராம் சேட் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மும்பை கிளை தலைவர் ரசல், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ஜெபகுமார், துணை தலைவர் வடிவேல், இணைச்செயலாளர் மாரியப்பன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், கிளை மன்ற நிர்வாகிகள் செய்து இருந்தனர். முன்னதாக பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மும்பை கிளை செயலாளர் ராஜ்குமார் கூறுகையில், “சமீபத்தில் நடந்த சாலை விரிவாக்க பணியால் சதுக்கம் பொலிவு இழந்தது. அதன் பிறகு சதுக்கத்தை சிறப்பாக புதுப்பித்து கொடுத்த எம்.எல்.ஏ. வர்ஷா கெய்க்வாட்டுக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். முல்லுண்டில் உள்ள சாலைக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.