‘அரசு நிதியளிக்கும் ஊடகம்’ பிபிசியை அலற விட்ட டிவிட்டரின் முத்திரை!!
‘அரசு நிதியளிக்கும் ஊடகம்’ என பிபிசியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் முத்திரையிடப்பட்டது. இதற்கு பிபிசி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். தற்போது இவர் இங்கிலாந்தின் பிரபலமான பிபிசி மற்றும் அமெரிக்காவின் என்பிஆர் ஊடகங்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளில் ‘அரசு நிதியளிக்கும் ஊடகம்’ என்ற முத்திரையை பதித்துள்ளார். இதற்கு பிபிசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எலான் மஸ்க்குக்கு இமெயில் அனுப்பிய பிபிசி நிர்வாகம், ‘பிபிசி எப்போதும் சுதந்திரமாக செயல்படும் நிறுவனம்.
உரிமக் கட்டணத்தின் மூலமாகத்தான் நாங்கள் இங்கிலாந்து அரசிடமிருந்து நிதி பெறுகிறோம். இது சட்டப்படியானது. டிவிட்டருடன் இணைந்து முடிந்தவரையில் விரைவில் இந்த சிக்கலை தீர்ப்போம்’ என கூறி உள்ளது. பிபிசி நியூஸ் உள்ளிட்ட பிற முக்கிய டிவிட்டர் கணக்குகளில் இதுபோன்ற முத்திரையிடப்படவில்லை. இது குறித்து எலான் மஸ்க் அனுப்பிய பதில் இமெயிலில், ‘ஊடக நிறுவனங்கள் பாரபட்சமில்லாதவை என பொய்யாகக் கூறக்கூடாது. எல்லா நிறுவனங்களுக்கும் சார்பு உள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் அதிகபட்ச வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை இலக்காக கொண்டுள்ளோம்’ என கூறி உள்ளார்.