இங்கி. மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் தங்கமுலாம் பூசிய சாரட் வண்டி வரலாற்று சிறப்புமிக்க கிரீடம்: புதிய தகவல்கள் வெளியீடு!!
இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லசும், ராணியாக கமிலாவும் அடுத்த மாதம் முடிசூட உள்ள நிலையில் விழா ஏற்பாடுகள் குறித்த புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பரில் உடல் நலக்குறைவால் மரணமடைந்ததைத் தொடர்ந்து, 74 வயதான அவரது மகன் மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து அவரது அதிகாரப்பூர்வமான முடிசூட்டு விழா வரும் மே 6ம் தேதி நடக்க உள்ளது. லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பாரம்பரிய வழக்கப்படி நடக்கும் விழாவில் இங்கிலாந்து மன்னராக சார்லசும், ராணியாக கமிலாவும் முடிசூட உள்ளனர்.
கடைசியாக கடந்த 1953ம் ஆண்டு ராணி 2ம் எலிசபெத் முடிசூடிய பிறகு 70 ஆண்டுகளுக்குப் பிறகு அரச குடும்பத்தில் நடக்கும் முடிசூட்டு விழாவை இங்கிலாந்து மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த விழாவிற்காக சார்லசும் அவரது மனைவி கமிலாவும் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு டயமன்ட் ஜூபிலி ஸ்டேட் சாரட் வண்டியில் பயணிப்பார்கள். இந்த சாரட் வண்டியில் குளிரூடப்பட்ட கேபினில் சார்லசும், கமிலாவும் பயணிப்பார்கள். அதைத் தொடர்ந்து, மன்னராக சார்லஸ் முடிசூடிய பின் பக்கிங்காம் அரண்மனைக்கு பாரம்பரியமான கோல்டு ஸ்டேட் சாரட் வண்டியில் திரும்புவார். 8 குதிரைகள் பூட்பட்ட இந்த சாரட் வண்டி சுமார் 260 ஆண்டுகள் பழமையானது.
முதல் முறையாக 1762ம் ஆண்டில் மன்னர் 3ம் ஜார்ஜ் இங்கிலாந்து நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க இந்த சாரட் வண்டியில் பயணித்தார். அதன் பின் ஒவ்வொரு முடிசூட்டு விழாவிலும் இந்த சாரட் வண்டி பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், அரச வம்சத்து சடங்குகளுடன் முடிசூடும் மன்னர் சார்லசுக்கு செயின்ட் எட்வர்ட்டின் விலை உயர்ந்த கிரீடம் சூட்டப்படும். இந்த கிரீடத்தில் வைரம், வைடூரியம், மரகதம் என 444 விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ராணி கமிலாவுக்கு மரகத கல் பதித்த மோதிரம் அணிவிக்கப்படும். மேலும், பல்வேறு பாரம்பரிய பொருட்களுடன் ராஜ அலங்கார நிகழ்ச்சிகளும் நடக்கும். இதில் இடம் பெறும் பல பொருட்களும் 1000 ஆண்டுகள் பழமையானது.