சீன தைவான் பிரச்சனையில் ஐரோப்பாவின் நிலைப்பாடு – இம்மானுவேல் மக்ரோன் விளக்கம் !!
தைவான் விவகாரத்தில் சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் எந்த கொள்கையையும் பின்பற்றாமல் ஐரோப்பா தங்களுக்கான தனி கொள்கையில் நிற்கும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
தைவான் அதிபர் சாய் இன்-வென் கலிபோர்னியாவில் அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கர்த்தியை சந்தித்ததை தொடர்ந்து, சீனா-தைவான் பிரச்சனை தீவிரமடைந்து வருகிறது.
தைவான் ஜலசந்தியை சுற்றி மூன்று நாள் போர் ஒத்திகையை நடத்தி வரும் சீனா, அதிகபடியான போர் விமானங்கள் மற்றும் போர் கப்பலை இந்த பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறது.
சீனாவின் இந்த போக்கு தற்போது உலக அரங்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அதிகரித்து வரும் தைவான் பிரச்சனையில், ஐரோப்பா தங்களுக்கான தனி கொள்கையில் நிற்கும் என்றும் இதில் சீனா, அமெரிக்கா ஆகிய எந்த நாடுகளின் உத்திகளையும் ஐரோப்பா பின் தொடராது என பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம், உக்ரைன்-ரஷ்யா விவகாரம், தைவான் பதட்டம் ஆகியவற்றை குறித்த மூன்று நாள் சுற்றுப் பயணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் சீனா சென்று இருந்த நிலையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரான்ஸ் ஊடகத்திடம் கருத்து தெரிவித்த மக்ரோன்,
“தைவான் பிரச்சனையை மோசமாக்கி விடாமல் ஐரோப்பா அதன் நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். அதே நேரம் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கி கொள்வதை தவிர்க்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.