;
Athirady Tamil News

வருவாய் அதிகாரிகளை பதவி இறக்கம் செய்யக்கூடாது- ராமதாஸ் அறிக்கை!!

0

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் வருவாய்த் துறை அதிகாரிகள் பதவி உயர்வில், பட்டப்படிப்பு படித்து பணியில் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கால் நூற்றாண்டுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை இப்போது செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதால், 200-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது அத்துறையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். 1995-ம் ஆண்டின் அரசாணையை , அது பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து செயல்படுத்தாமல், அந்த ஆணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் இருந்து செயல்படுத்துவதே சுமூகத் தீர்வாக இருக்க முடியும். அவ்வாறு செய்யும் போது, இதுவரை பதவி உயர்வு பெற்ற தொகுதி 4 மூலம் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் பதவி இறக்கம் செய்யப்படாமல் இப்போதுள்ள பதவிகளில் தொடர முடியும். கடந்த காலங்களில் அவர்கள் அளித்த தீர்ப்புகளும், பிறப்பித்த ஆணைகளும் தொடர்ந்து செல்லுபடியாகும்.

அதே நேரத்தில் பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட தொகுதி 2 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வருவாய் உதவியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, 1995-ம் ஆண்டு அரசாணை அதே ஆண்டில் செயல்படுத்தப்பட்டிருந்தால் என்னென்ன பதவி உயர்வும், பணப்பயன்களும் கிடைத்திருக்குமோ, அவை அனைத்தையும் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 வருவாய் கோட்ட அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதால் இதை செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது. இதன் மூலம் இரு தரப்பினரும் குறைகளின்றி செயல்படக் கூடும்; வருவாய்த்துறை பணிகளும் செம்மையாக நடைபெறும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.