தேர்தல் அரசியலில் இருந்து விலகிய கர்நாடக பாஜக மூத்த தலைவர்!!
கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. ஆனால், ஆளும் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் வியாழக்கிழமை முடிவடைய உள்ள நிலையில், பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
தற்போதைய எம்எல்ஏக்கள் பலருக்கு வாய்ப்பு வழங்க மறுப்பதாகவும், பாஜக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி பாஜக ஆட்சியமைக்க உதவி செய்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா (வயது 74) தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். வேட்பாளர் தேர்வில் தனது பெயர் இடம்பெறாது என கடந்த மாதம் அவர் சூசகமாக தெரிவித்திருந்த நிலையில், இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதுதொடர்பாக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.