ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டேன்… பா.ஜ.க. தலைமைக்கு எதிராக அதிரடி முடிவு எடுத்த அதிருப்தி தலைவர்!!
கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைய எம்எல்ஏக்கள் பலருக்கு வாய்ப்பு வழங்க மறுப்பதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏவும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர், கட்சிக்கு எதிராக தேர்தலில் குதிக்க உள்ளார். மற்றவர்களுக்கு வழிவிடும்படி கட்சி தலைமை கேட்டுக் கொண்டதால் வருத்தம் அடைந்ததாகவும், தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்றும் ஏற்கனவே அவர் கூறியிருந்தார். தற்போதைய ஹூப்ளி தொகுதி எம்எல்ஏவான ஜெகதீஷ் ஷெட்டர், இதுவரை 6 தேர்தல்களில் வெற்றிவாகை சூடி உள்ளார். 2018ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் நல்வாட் என்பவரைவிட 21000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தனது முடிவு குறித்து செய்தியாளர்களிடம் ஜெகதீஷ் ஷெட்டர் பேசுகையில், ‘கடந்த 6 தேர்தல்களில் நான் 21,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய மைனஸ் பாயின்ட் என்ன? கட்சியின் முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நான் ஏற்கனவே எனது தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிவிட்டேன். அதை மேலும் தீவிரப்படுத்துவேன். தேர்தலில் இருந்து ஒதுங்கும் பேச்சுக்கே இடமில்லை’ என திட்டவட்டமாக கூறினார்.